!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Tuesday, January 21, 2014

விஜயகாந்த்?


விஜயகாந்த் என்ன செய்யப் போகிறார்? இதுதான் தற்போதைய சஸ்பென்ஸ். சில ஷேர்கள் வாங்கிய பிறகு கூட இப்படி நான் நகத்தை கடித்ததில்லை. அந்த அளவுக்கு ஆர்வத்தை இது தூண்டி விட்டிருக்கிறது. என்ன முடிவெடுப்பது என்று புரியாமல் குழம்பி போயிருக்கிறாரா? அல்லது பேரத்தை அதிகரிக்க போக்கு காட்டுகிறாரா என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.அந்த சஸ்பென்ஸ் முடிவுக்கு வரும்முன் நாம் நமது அலசலை பார்ப்போம்.

பிஜேபி அணி விஜயகாந்தையும் சேர்த்துக் கொண்டு பலமான மூன்றாவது அணியாக உருவாகவேண்டும் என்பதுதான் என் விருப்பம்.

இங்கே பலர் விஜயகாந்தை குறைத்து மதிப்பிடுகிறார்கள். அவர்களின் கணக்கு தப்பாக போகக்கூடும். காரணம், இன்றைய உலகில் தரத்தைவிட sustainability தான் மிக முக்கியம். அங்கேதான் அவர் பலமாக இருக்கிறார். இன்று சந்தையில் நிலைத்து இருக்கும் எல்லா பிராண்டுகளும் இந்த அடிப்படையில்தான் வெற்றி பெற்றிருக்கின்றன. அதாவது தரம் ஓரளவு இருந்தால் போதும், ஆனால் தொடர்ந்து சந்தையில் இருந்தால் மக்கள் அதை பிராண்டாக ஏற்றுக் கொள்வார்கள்.

பிரமாண்ட ஊழல் மற்றும் சந்தர்ப்பவாத அரசியல்களால் தமிழக அரசியல் அதகளப்பட்டபோதும், இரண்டு திராவிட கட்சிகளும் இன்னமும் தங்கள் வோட்டு வங்கியை நம்புகிறார்கள் என்றால் அது இந்த எதார்தத்தால்தான். அப்படி இருக்கையில் விஜயகாந்தின் ஓட்டு வங்கிக்கு பெரிய அளவில் சேதாரம் இருக்காது.

விஜயகாந்த்தை பொறுத்தவரையில் `தகுதி` என்று சொல்ல விஷயம் எதுவும் இல்லை என்றாலும், `குறை` என்று சொல்லப்படுவதையும் நான் குறையாக கருதவில்லை.

குடிகாரர், அதையும் அவர் மறைப்பதில்லை என்பதுதான் அவர் மீது வைக்கப்படும் மிகப் பெரிய குற்றச்சாட்டு. ஆனால் குடிக்காத இரண்டு தமிழின தலைவர்கள்தான் தமிழனை குடிகாரர்களாக மாற்றிவிட்டார்கள் என்பதை நினைத்தால், அந்த முரண்பாடு இதைவிட மோசம்.

இவர் பேச்சாளர்/கட்டுரையாளர் இல்லை என்பதால் இவருடைய எண்ணங்களை கணிப்பதும் சிரமம். பேச தெரியவில்லை என்பதையெல்லாம் குறையாக நினைக்க முடியாது. நன்றாக பேசுவதுதான் திறமை என்றால் வைகோ இந்நேரம் முதல்வராக ஆகியிருக்க வேண்டும். எனவே விஜயகாந்த அதிகாரத்துக்கு வந்த பிறகு, செயலில் இவருடைய கொள்கைகளை சொல்ல வரும்போதுதான் இவரை புரிந்து கொள்ளமுடியும். அதுவரை இவர் ஒரு மாற்று சக்தி என்ற மாயையும் தொடரும், பிற அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு ஓட்டும் இவர் பக்கம்தான் திரும்பும்.  அதனால்தான் அவர் காட்டில் தற்போது மழை அடிக்கிறது 

தற்போதைக்கு அவரை பற்றிய என்னுடைய அபிப்ராயம் நியூட்ரல்தான். ஆனால் அவரை ஆதரிக்க வேறு சில காரணங்கள் இருக்கிறது. இன்று தமிழ்நாட்டின் ஆலகால விஷமாக, ஆனால் ஆலமரமாக ஊறிவிட்ட இரண்டு திராவிட கட்சிகளும் அழியவேண்டும். அவர்கள் இருவரும் இருக்கும்வரை வேறு தலைகள் வளராது. எனவே கிடைக்கும் ஆயுதத்தை வைத்து அவர்களுக்கு முடிவு கட்டவேண்டும். அதுதான் என்னுடைய முதல் விருப்பம். அந்த வேலையை இந்த அணி செய்யக் கூடும் என்பதால்தான் இந்த ஆதரவு. அதுமட்டுமின்றி இனி வோட்டு வங்கியில் அதிக சதவிகிதம் மதில் மேல் பூனைகள் வசம்தான் இருக்கும். இந்த கூட்டணி பலமாக இருக்கிறது என்று தெரிந்து அவர்கள் இப்படி சாய்ந்தால், தமிழ்நாடும் டெல்லி தேர்தலைப்போல் மாறிவிடும்.  

இந்த மூன்றாவது அணி வென்றால் அது சில விஷ சக்திகள் வளர வழி வகுக்கும் என்று சிலர் நினைக்கலாம். பிஜேபியை பொறுத்தவரை நான் அப்படி நினைக்கவில்லை. அவர்கள் மதம் எனும் ஆயுதத்தை பயன்படுத்துவது ஒரு வியாபார நிர்பந்தம். இன்றைய வியாபார உலகில் என்னுடைய பொருளை வாங்காவிட்டால் உன்னுடைய முடி கொட்டிவிடும்/ வீடு இடிந்துவிடும் என்று பயமுறுத்தும் உத்திதான் அது. அதாவது அதில் உண்மை ஓரளவு இருக்கும். அது மிகைப்படுத்தப்படும். பிஜேபியை பொறுத்தவரையில் அதிகாரம் வந்தவுடன் அவர்கள் இந்த உத்தியை கைவிட்டுவிடுவார்கள். அதுதான் பல மாநிலங்களில் நடக்கிறது.

குஜராத் கலவரம்... என்றும் யாரும் ஆரம்பிக்காதீர்கள். நான் 1980 களில் சிறுவனாக இங்கே இருந்தபோதே சில கலவரங்களை கவனித்தவன். இது தேவயாணி கோபர்க்டே விவகாரம் போன்றது. இரு தரப்பிலும் ஏதோ ஒரு நியாயம் இருப்பது போல தோன்றும். சில பிரச்சினைகள் அப்படிதான். குறை எங்கே என்று கண்டுபிடிப்பது சிரமம்.

(பிஜேபி பற்றி எழுத ஆரம்பித்தால் அதை சுருக்கமாக முடிக்க முடியாது. ஆனால் அது பதிவின் போக்கை மாற்றிவிடும் என்பதால் தவிர்க்கிறேன்.)

ஒருவேளை பாமக இந்த கூட்டணிக்கு வந்தால், ஜாதிய செடிக்கு கொஞ்சம் உரம் கிடைக்கும் என்பதுதான் இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம். வேறு வழி இல்லை, சில லாபம், சில நஷ்டம்.

வைகோவை பொறுத்தவரையில் எதுவும் சொல்வதற்கில்லை. அவர் நமது கணக்குகளுக்கு அப்பாற்பட்டவர். யாரவது ஒரு ஓட்டலை திறந்தால் முதல் ஆளாய் போய் உட்கார்ந்து கொள்வார். வேறு ஒரு வாடிக்கையாளர் வெளியே நின்று கொண்டு `மணியாவுது` என்று போக்கு காட்டுவார். கடைசியில் அந்த வாடிக்கையாளருக்குதான் முதல் மரியாதை கிடைக்கும்.வைகோவின் அரசியல் சாதுர்யம் அப்படி. இவர் இன்னும் சந்தையில் இருப்பதே அதிசயம்தான்.

சமீபத்தில் இண்டியன் எக்ஸ்பிரஸ் -ல் ஒரு கட்டுரை படித்தேன். `என் தலையில் துப்பாக்கியை வைத்து காங்கிரஸா, ஆம் ஆத்மியா என்று மிரட்டினாலும் நான் காங்கிரசுக்குதான் ஓட்டு போடுவேன்` என்றார் கட்டுரையாளர். மனிதர் அந்த அளவுக்கு ஆம் ஆத்மி கட்சியை வெறுக்கிறாராம். நானும் அப்படித்தான். இந்த இரண்டு கழகங்களுக்கும் ஒரு அதிர்ச்சி வைத்தியம் தேவை. அதற்காகவாவது இந்த அணி ஜெயிக்க வேண்டும்.  

5 comments:

வவ்வால் said...

சிவானந்தம்,

தேர்தல் வரும் வரையில் அரசியல் திறனாய்வுகளாக வருமோ அவ்வ்!

//இங்கே பலர் விஜயகாந்தை குறைத்து மதிப்பிடுகிறார்கள். அவர்களின் கணக்கு தப்பாக போகக்கூடும். காரணம், இன்றைய உலகில் தரத்தைவிட sustainability தான் மிக முக்கியம். அங்கேதான் அவர் பலமாக இருக்கிறார். //

என்னைப்பொறுத்தவரையில் மிகையாக மதிப்பிடப்படுகிறார் என்றே சொல்வேன்.

கிரிக்கெட்டில் டெயில் எண்டர்கள் எடுக்கும் ரன்கள் வெற்றிக்கு சமயத்தில் உதவும்,அதற்காக அவர்களை நம்பி பேட்டிங் திட்டமிடுதல் செய்ய மாட்டாங்க.விசயகாந்தின் வாக்கு வங்கியும் அப்படித்தான் , மார்ஜினுக்கு உதவலாம்,ஆனால் அதுவே கண்டிப்பான வெற்றிக்கு வழிகாட்டாது,கூட்டணியின் முன்னணி கட்சியின் வலிமையே முக்கியம்.

# "sustainability " அடிப்படையில் பார்த்தால் தேசிய அரசியலில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் பக்கத்தில் வேறு எந்தக்கட்சியுமே வர முடியாது.

ஆனால் இரு இயக்கங்களுமே மக்களிடையே நம்பகத்தன்மையை இழந்துவிட்டன.

# காங்கிரஸ் உடன் யார் சேர்ந்தாலும் சர்வநாசம் ஆவார்கள் என்பதை மட்டும் இப்போதைக்கு தெளிவா சொல்லிக்கொள்கிறேன்!

சிவானந்தம் said...

வவ்வால்,

///தேர்தல் வரும் வரையில் அரசியல் திறனாய்வுகளாக வருமோ அவ்வ்!///

எது பரபரப்போ அது சிந்தனையில்...

///கிரிக்கெட்டில் டெயில் எண்டர்கள் எடுக்கும் ரன்கள் வெற்றிக்கு சமயத்தில் உதவும்,அதற்காக அவர்களை நம்பி பேட்டிங் திட்டமிடுதல் செய்ய மாட்டாங்க.விசயகாந்தின் வாக்கு வங்கியும் அப்படித்தான் , மார்ஜினுக்கு உதவலாம்,ஆனால் அதுவே கண்டிப்பான வெற்றிக்கு வழிகாட்டாது,கூட்டணியின் முன்னணி கட்சியின் வலிமையே முக்கியம்.///

தியரி சரிதான். ஆனால் அரசியல் கணக்குகள் வேறு. நடுநிலை ஓட்டுகளும், மோடி அலையும் இவர்களுக்கு சாதகமாகும். இருந்தாலும் இப்போதைய கணக்குப்படி இந்த கூட்டணியில் இவரிடம் ஓட்டு வங்கி அதிகம் என்பதால், இந்த கூட்டணி வென்றால் அதன் பெருமையை இவர்தான் தட்டிச் செல்வார். மொத்தத்தில் நாம் ஒருவரை கீழே இழுக்க, அதன்விளைவாக சிலர் மேலே போவார்கள். எல்லாம் என்னால்தான் என்ற இறுமாப்பும் வரும். இதுதானே இன்றைய அரசியல்.

///# "sustainability " அடிப்படையில் பார்த்தால் தேசிய அரசியலில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் பக்கத்தில் வேறு எந்தக்கட்சியுமே வர முடியாது.//

அவர்கள் அதிகாரத்தை பார்த்துவிட்டார்கள். எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்க முடியாது. அது இவருக்கு சாதகம். எனவே இந்த ஷேர் கொஞ்சம் ஏறிய பிறகுதான் இறங்கும்.

ஜோதிஜி said...

ஆனால் ஆலமரமாக ஊறிவிட்ட இரண்டு திராவிட கட்சிகளும் அழியவேண்டும். அவர்கள் இருவரும் இருக்கும்வரை வேறு தலைகள் வளராது. எனவே கிடைக்கும் ஆயுதத்தை வைத்து அவர்களுக்கு முடிவு கட்டவேண்டும். அதுதான் என்னுடைய முதல் விருப்பம்.

இருவருக்கும் ஒரே சிந்தனை. நானும் வெளிப்படையாக எழுத தொடர்பில் இருந்த ரர மற்றும் உபிக்கள் தொடர்பில் இருந்து போயிந்தே.

சிவானந்தம் said...

வாங்க ஜோதிஜி,

என்ன ஓய்வில் இருக்கிறீர்களா?

///இருவருக்கும் ஒரே சிந்தனை. நானும் வெளிப்படையாக எழுத தொடர்பில் இருந்த ரர மற்றும் உபிக்கள் தொடர்பில் இருந்து போயிந்தே.//

இங்கே ஒரு விஜய் ரசிகன் இருக்கிறான். ஜில்லா படத்தை 7 தடவை பார்த்துவிட்டானாம். `படம் சுமார்` என்று விமர்சனம் படித்தேன்` என்றால், `இதையே வேறு யாரவது சொல்லி இருந்தால்` என்று முறைக்கிறான். இப்படி ஒரு அடிமை மனப்பான்மை எல்லோரிடமும் ஊறிவிட்டது.

இதுதான் இந்தியாவின் தலைஎழுத்து. பிராண்ட் என ஒருவரை ஏற்றுக்கொண்ட பிறகு, `நான் தவறு செய்துவிட்டேன்` என தலைவர்களே ஒப்புக்கொண்டாலும் இவர்கள் ஏற்க மாட்டார்கள்.

இவர்களுக்கு தொடர்ந்து சில தோல்விகள் தேவை. அதுவரை அடங்க மாட்டார்கள். போகட்டும் விடுங்கள்.

Unknown said...

evar third allamarama

Post a Comment