!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Thursday, November 29, 2012

இந்த வாரம் எனக்கு நிறைய கெட்ட எண்ணங்கள் உதிக்கலாம்

சமீபகாலமாக அரசியல் குறித்த பதிவுகள் எழுத ஆரம்பித்தால், அது முற்றுபெறாமல் நின்று விடுகிறது. எனவே நானும் அங்கே அதை பார்த்தேன் இங்கே இதை கேட்டேன் என சொந்தக் கதையையும், நகர்வலங்களை பதிவாக்கி கொண்டிருக்கிறேன்.

அனுபவங்களுக்கும் பஞ்சமில்லை. ஒரு பதிவன் என்ற பார்வையில் எதை பார்த்தாலும் அங்கே ஒரு விஷயம் கிடைத்துவிடுகிறது. இந்தவாரமும் அப்படி சில...

அவனும் அப்படித்தானா?

சாப்பாட்டில் எனக்கு ஒரு வித்தியாசமான பிரச்சினை. பொதுவாக எல்லோருக்கும் சிலது பிடிக்கும்; சிலது பிடிக்காது. இது இயற்கை. எனக்கு விருந்தாளி வாழ்கை என்பதால், இந்த விஷயத்தில் ஒரு சுதந்திரம் எனக்கு பறிபோனது.

ஒரு உணவு வகை பிடிக்கவில்லை என்றால் அதை அப்படியே வைத்துவிட முடியாது. சிறு வயதில், மாமா ஆதரவில் வளர்ந்த போது, அப்படி ஒரு முறை நான் செய்துவிட, என் ஆயா எனக்கு கீதா உபதேசமே செய்துவிட்டார். 

மற்றவர்கள் வீட்டில் இப்படி செய்வது அநாகரீகம் என்பதை நானே உணர்ந்த பிறகு, கஷ்டப்பட்டு ஜீரணிக்க பழகிக் கொண்டேன்.

ஆரம்பத்தில், பிடித்ததை முதலில் சாப்பிட்டுவிட்டு, பிடிக்காததை கடைசியில் சாப்பிடுவேன்.

இதில் ஒரு தலைவலி வந்தது. பிடிக்காததை கடைசியாக சாப்பிட்டால், சாப்பிட்ட உணர்வே வருவதில்லை. அதிருப்தியாக இருக்கும்.

இதற்கு மாற்றாக, பிடிக்காததை முதலிலும், பிடித்ததை கடைசியாகவும் சாப்பிடுவது என முடிவு செய்தேன். சாப்பாட்டை முடித்து எழும்போது திருப்தியாக எழுந்திருக்க வேண்டும்.

இதிலும் ஒரு தலைவலி வந்தது. சில சமயம் பிடிக்காததை நான் முதலில் காலி பண்ணும்போது, யாரவது கவனித்துவிடுவார்கள். எனக்கு அது பிடிக்கும் என நினைத்து இன்னும் கொஞ்சம் வைப்பார்கள். அதுதானே லாஜிக். ஆனால் நான் திருதிரு என முழிப்பேன்.

இப்படி பிடிக்காததை நிறைய சாப்பிட வேண்டிய கொடுமையைவிட, கடைசியில் அதை குறைவாக சாப்பிடும் கொடுமையே பரவாயில்லை என்று பழைய  முடிவுக்கே வந்தேன்.

`பிடிக்காததை `பிடிக்காது` என்று சொல்லலாமே! ` என்று நீங்கள் கேட்கலாம். கேள்வி கேட்பது ரொம்ப ஈசி. பதில் சொல்வதுதான் கஷ்டம். அது ஒரு வினோதமான சிக்கல். எனவே அதை விட்டுவிடுவோம். 

சமீபத்தில் இப்படி சாப்பிடும்போது சித்தி சொன்னார். `உன்னையும், உன் (இறந்துவிட்ட) அண்ணனையும் இந்த விஷயத்துல பாராட்டனும்டா. பிடிக்கலன்னு எதையும் வைக்க மாட்டறீங்க. எப்படியாவது சாப்டுடறீங்க. எங்களுக்கும் வந்து வாய்ச்சுதே... `என்றார்.

நான் ஓட்டலில் சாப்பிடும் லட்சணத்தை அவர் பார்த்ததில்லை. அதுதான் இந்த பாராட்டு. ஓட்டலில் நான் நடந்து கொள்ளும் விதமே  தனி. அங்கே எனக்கு சுதந்திரம் இருப்பதால், பிடிக்காவிட்டால் அப்படியே வைத்துவிடுவேன்.காசு வீணாப் போவதைப்பற்றி கவலைப்படுவதில்லை. ஷேர் மார்கெட்டுக்கு அடுத்தபடியாக நான் பணத்தை அழித்தது ஓட்டலில்தான். புத்தகங்கள் கூட மூன்றாவது இடம்தான்.

நான் இப்படி சாப்பாட்டை வீணாக்குவதை சிலர் குறை சொல்லியும் இருக்கிறார்கள். ஆனால் நான் மாறவில்லை. எனக்கு இங்கே ஒரு முகம், அங்கே ஒரு முகம்.

தற்போது நான் தெரிந்துகொண்டது, என் அண்ணனும் இப்படி கஷ்டப்பட்டிருக்கிறான் என்பதைத்தான்.

அதே கதை + கோவம் 1

வந்த உறவினர்களுடன் கோவில் பயணம். அம்பாஜி என்ற கோவிலையும் மற்ற சில உப கடவுள்களையும் பார்பதாக திட்டம். கோவில் இங்கிருந்து 200 கிலோமீட்டர் தூரத்தில்.

எனக்கு பக்தி இல்லை. இருந்தாலும், எல்லோரும் கிரிக்கெட் விளையாடும்போது நான் மட்டும் ஃபுட்பாலா விளையாட முடியும். எனவே நானும் இந்த புண்ணிய பயணத்தில். அவர்கள் அதை கோவிலாக பார்க்க, நான் கட்டிடகலையாக, கலாச்சராமாக பார்த்தேன்.

இப்படி பயணிக்கும் போது வீட்டில் இருந்து எடுத்து சென்ற சாப்பாட்டை வழியில் சாப்பிட்டோம். ஊரிலிருந்து வந்த ஆண் உறவினருக்கு அதில் ஒன்றை பிடிக்கவில்லை. இருந்தாலும் வந்த இடத்தில் அவர்கள் மனம் கோணும்படி நடக்க முடியுமா? எனவே அதை சாப்பிட்டார். என்னைப் போல் ஜீரணித்துக் கொண்டார் என்பது சரியான வார்த்தை.

இதை கவனித்த அவர் மனைவிக்கு வந்ததே கோவம். `இதையே நான் செஞ்சா சாப்பிடமாட்டேங்கறார். ஆனா அக்கா செஞ்சா மட்டும் பிடிக்குதா?` என கோவப்பட்டார்.

சொந்த வீட்டில் அம்மாவிடமும், மனைவியிடமும் சில விஷயங்களை உரிமையாக சொல்லலாம். மற்ற இடங்களில் நாம் அனுசரித்துப் போவோம். இதுதான் நாகரீகம். இது அந்த பெண்ணுக்கு தெரியவில்லை. இத்தனைக்கும் அவர் பட்டதாரி.

கல்வி அறிவு வேறு, பொது அறிவு என்பதை உணர்த்திய சம்பவம் இது. அதிலும் பெண்கள் இதில் ரொம்பவே பின்தங்கி இருக்கிறார்கள்.

இந்த லட்சணத்தில் 33 சதவிகித கோரிக்கை வேறு. எனக்கு இதில் உடன்பாடில்லை. கொஞ்சம் குறைக்கலாம். அதாவது 3 சதவிகிதம் கொடுக்கலாம். 

கோவம் 2

வந்த உறவினர்களுக்கு சில சம்பிரதாய மரியாதைகள். பதிலுக்கு அவர்களும் இவர்களுக்கு செய்ய வேண்டிய சம்பிரதாயங்கள். இதில் ப்ரோட்டோகாலில் ஏதோ கோளாறு வந்துவிட்டது. பிறகென்ன... சண்டை, மனஸ்தாபம்தான்.

`இப்படி நாலு இடத்துக்கு போகும்போது ஏதாவது பிரச்சினை வரத்தான் செய்யும்` என்றார் ஒரு அனுபவஸ்தர். எல்லா விஷ்யத்திலும் நான் பட்டும்படாமல் இருப்பதால், எனக்கு இது புதுசு. இந்த சின்ன விஷயதுக்கா சண்டை போடுவாங்க என நான் ஆச்சர்யப்பட்டேன். 

கோவம் 3 

வந்த உறவினர்கள் ஊருக்கு பயணம். லக்கேஜ் அதிகம். நிச்சயம் உதவி தேவை. அதிகாலையில் வண்டி. நானும் போனேன்.

இங்கே ஒரு ஜோக் ஞாபகம் வருகிறது. உண்மையில் அமெரிக்காவை கண்டுபிடிக்க கொலம்பஸ் கிளம்பும் போதே இந்தியர்களும் அதே வேலையாய் கிளம்பினார்களாம். ஆனால் இந்தியர்கள் மூட்டை முடிச்சுகளை கட்டி கிளம்புவதற்குள் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்து விட்டாராம். அந்த அளவுக்கு இந்தியர்கள் லக்கேஜ் பிரியர்கள்.

இங்கேயும் லக்கேஜ் அதிகம் என்பதால், லக்கேஜுடன் பெண்களை ஆட்டோவில் அனுப்பிவிட்டு பைக்கில் நாங்கள் சென்றோம். அந்த ஆட்டோகாரர் ரேஸ் வண்டி ஓட்டுபவர் போலிருக்கிறது. எங்களால் துரத்த முடியவில்லை.

அந்த ஆட்டோகாரர் ஸ்டேஷனில் அவர்களை இறக்கிவிட்டு தயாராக இருந்தார். நான்தான் முதலில் கண்டுபிடித்தேன். ஆட்டோவை அழைத்து வந்தவர், இறங்கவேண்டிய இடத்தை ஆட்டோகாரரிடம் சொல்லி இருப்பார் என நினைத்து ஆட்டோவை அனுப்பியாகிவிட்டது.

ஆனால் அந்த ஆட்டோகாரர் சொன்ன இடத்தில் இறக்கவில்லை. கொஞ்சம் முன்னால் இறக்கிவிட்டார். வண்டி ஏற்ற வந்த மற்றவர்கள் வண்டி இங்கே நின்றது தெரியாமல் தேட, அவர்களுக்கு டென்ஷன்.

ஒருவழியாக கண்டுபிடித்து வந்த ஒருவர்  கத்த ஆரம்பித்துவிட்டார். `இங்கே யார் இறங்க சொன்னது, இப்ப நாம லக்கேஜை கொஞ்சம் தூரம் தூக்கிகுன்னு போகணும்` என்று சத்தம் போட்டார்.

பெண்களை தனியாக ஆட்டோவில் அனுப்பிவிட்டோமே என்ற கவலை. வண்டி கிளம்பும் நேரம் என்ற பதைபதைப்பு. அது கோவமாக வார்த்தையாக வந்துவிட்டது.

அந்த பெண்களுக்கு இது பேயறைந்த மாதிரி இருந்திருக்கும். எனக்கும் இது அதிர்ச்சி. இந்த ஒரு வாரத்தில் அவர்களுக்கு விருந்து வைத்து, ஆலய தரிசனம் காட்டி, கடைசியில் ஊருக்கு போகும் நேரத்தில் இப்படி ருத்ர அவதாரத்தை பார்த்தால் அவர்களுக்கு எப்படி இருக்கும்?

அவர்களை வண்டி ஏற்றிவிட்டு வீட்டுக்கு வந்தபிறகு சொன்னார்.`எனக்கு எப்படி கோவம் வந்துதுன்னே தெரியல. திட்டிட்டு அப்புறம் நினைச்சேன், ஏன் திட்டனோம் என்று`

அவர் இப்படி சொன்னதும் நான் இது யதார்த்தம் என சமாதானமாகிவிட்டேன். ஸ்டேஷனில் அவர்களை வைத்துக் கொண்டே இதை சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

இந்த ஒரு வார சம்பவங்களை நிதானமாக அசை போட்டபோது, பலர் கோவப்பட்டது கவனத்துக்கு வந்தது. ஆரம்பத்தில் காரணம் தெரியாமல் முழித்தாலும், பின்னர் அதையும் கண்டுபிடித்துவிட்டேன். தொடர்ந்து செய்திகளை படிப்பதால் கண்டுபிடித்தேன். 

இந்த வாரம் விருந்தினர் வாரம் என்பதால், எல்லா வீட்டிலும் அசைவம்தான். இப்படி நிறைய அசைவம் சாப்பிட்டதால் வந்த வினைதான் இது. அதனால்தான் எல்லோரும் அநாகரீகமாக நடந்து கொண்டார்கள். :-))

ஒருவேளை சைவம் சாப்பிட்டிருந்தால் சாந்தமாக சண்டை போட்டிருக்கலாம்.  

நானும் இந்த வாரம்  நிறைய அசைவம் சாப்பிட்டுவிட்டேன். எனவே இந்த வாரம் எனக்கும் நிறைய கெட்ட எண்ணங்கள் உதிக்கலாம். எப்படியாவது கட்டுப்படுத்தணும்.

புரிந்து நடந்து கொள்ளுங்கள்

டிரைனில் அவர்களை உட்கார வைத்துவிட்டு பிளாட்பாரத்தில் நிற்கையில் அங்கே ஒரு பிரச்சினை. ஒரு பை அனாதையாய் இருந்தது. அங்கே இருந்தவர்கள் யாரும் இது என்னுடையது இல்லை என்று மறுத்துவிட்ட நிலையில், ஒரு டவுட்டிங் தாமசுக்கு சந்தேகம் வந்துவிட்டது.

வட இந்தியாவில் குண்டு வெடிப்பு சாதாரணமாகிவிட்ட நிலையில் அவர் போலீசுக்கு சொல்லிவிட்டார்.

அந்த பைக்கு சொந்தகாரர் வண்டியில் பையை வைத்துவிட்டு பிளாட்பாரத்தில் பேசிக்கொண்டிருக்கிறார். பஸ்சுல சீட் பிடிக்கிறமாதிரி, பை வச்சி சீட்டை பாதுகாக்கறார் போலிருக்கிறது.

அங்கே போலீஸ் வந்ததை பார்த்தாலும், பிரச்சினையே நம் பைதான் என்பது இவருக்கு தெரியாது. கடைசியில் வண்டி கிளம்பும்போது இவர் வந்து உரிமை கொண்டாட, சில் வாய் சண்டைகளும் பிரச்சினை தீர்ந்தது.

இங்கே யாரையும் குறை சொல்ல முடியாது. இது சாதாரண நிகழ்வுதான். ஆனால், குண்டு வெடிப்புகளுக்கு பிறகு மக்களுக்கு பயம் வந்திருப்பதால், நமது உடமைகளை பக்கத்தில் இருப்பவர்களிடம் சொல்லிவிட்டு போவது நல்லது.

நன்றி 

கடந்த பதிவில் ஆட்சென்ஸ் குறித்து ஆலோசனை கேட்டிருந்தேன். வந்த கருத்துக்களுக்கு பிறகு, இணையத்தில் சில விளம்பர நிறுவனகளின் நிறை குறைகளை குறித்த பதிவுகளையும் படித்தேன். தற்போது bidvertiser நிறுவி இருக்கிறேன்.

ஆலோசனை கூறிய அனைவருக்கும் நன்றி.    


4 comments:

Unknown said...

. சில சமயம் பிடிக்காததை நான் முதலில் காலி பண்ணும்போது, யாரவது கவனித்துவிடுவார்கள். எனக்கு அது பிடிக்கும் என நினைத்து இன்னும் கொஞ்சம் வைப்பார்கள்

இதற்கு நானும் பலி வாங்க பட்டு இருக்கிறேன் சார்.கரேட்ட சொன்னீங்க போங்க !

சிவானந்தம் said...

வாங்க ஆரிப்

இதிலும் பலவிதமான அனுபவம் இருக்கிறது.

ஒரு வீட்டில் விருந்து. புதுமணப் பெண் சமையல். குறை சொல்லமுடியுமா? நான் அமைதியாக சாப்பிட்டேன். பக்கத்தில் இருந்தவர் சும்மா இல்லாமல்,, அந்த பெண்ணை பாராட்டும்விதமாக, சாம்பார் பிரமாதம் என்று சொல்லிவிட்டார்.

அந்த பெண் அடுத்த முறையும் அவருக்கு சாம்பாரே ஊற்ற, அதை அவர் தடுத்த விதமும் அவர் முகம் போன போக்கும் இருக்கிறதே... அது செம காமெடி.

வவ்வால் said...

சிவானந்தம்,

சாப்பிடுறதலயும் எத்தனை சங்கடங்கள், இதே போல எங்கம்ம்மா கிட்டவும் ஒன்னு நல்லா இருக்குன்னு சொல்லிட்டா அதையே சமைச்சுக்கிட்டு இருப்பாங்க, கத்திரிக்கா கொத்ஸ் நல்லா இருக்குன்னு சொல்லப்போய் , அதையே ஒரு வாரம் தொடர்ச்சியா செய்து வச்சாங்க :-))

உருளை கிழங்கு நல்லா இருக்குன்னு சொல்லிட்டா அந்தா வராம் முழுக்க உருள வேண்டியது தான்.

உங்க பாணியில் வாய தொறக்காம( திண்ண மட்டும் தான் வாய் தொறக்கும்) அப்புறம் சாப்பிட ஆரம்பிச்சுட்டேன் :-))

--------

அசைவம் சாப்பிட்டு கெட்ட கெட்ட எண்ணம் வரும்னா நான் எல்லாம் இன்னேரம் ஜனாதிபதியின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட தூக்கு தண்டனை கைதியா தான் இருப்பேன் :-))

சிவானந்தம் said...

வாங்க வவ்வால்,

(உங்க கமென்ட் ஸ்பாம்ல இருந்தது. இப்பதான் கவனிச்சேன்.)

... அதையே ஒரு வாரம் தொடர்ச்சியா செய்து வச்சாங்க :-))

அம்மாகிட்டயே இப்படின்னா, என் நிலைமை எப்படி இருந்திருக்கும்? ம்ஹும்... இன்னும் இந்த தலைவலியிலிருந்து தப்பிக்க முடியல..

///அசைவம் சாப்பிட்டு கெட்ட கெட்ட எண்ணம் வரும்னா நான் எல்லாம் இன்னேரம் ஜனாதிபதியின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட தூக்கு தண்டனை கைதியா தான் இருப்பேன் :-)) ///

நானும் அதை கிண்டலாத்தான் சொன்னேன். நமது செயலை நியாயப்படுத்தி மற்றவர்களை குறை சொல்லும் மனப்பான்மையின் வெளிப்பாடுதான் இது.

நானும் ஓட்டலுக்கு போனால் அசைவம்தான். ஒவ்வொரு ஓட்டலிலும் சுவை வேறுமாதியாக இருக்கும் என்பதால், அதற்கு அசைவமே பரவாயில்லை என அங்கே போய்விடுவேன்.

Post a Comment